நில மோசடி வழக்கில் கைதான பாஜ பிரமுகரிடம் தீவிர விசாரணை
புழல், செப்.27: புழலில் நில மோசடி உள்பட பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்ட பாஜ பிரமுகர் மின்ட் ரமேஷை, 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து, புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை சேர்ந்த மின்ட் ரமேஷ், பாஜ மாநில முன்னாள் நெசவாளர் அணி நிர்வாகியாக இருந்த இவர், புழல் அடுத்த புத்தகரம் பகுதியில் வேணு என்பவரின் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் வேணு புகார் அளித்தார். அதன்பேரில், பாஜ பிரமுகர் மின்ட் ரமேஷ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மின்ட் ரமேஷை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி, கடலூர் சிறையில் இருந்து மின்ட் ரமேஷை பலத்த பாதுகாப்புடன் நேற்று புழல் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.