விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் நெரிசலை கட்டுப்படுத்த குழு: அங்காடி நிர்வாகம் நடவடிக்கை
அண்ணாநகர், ஆக.27: தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வெளியூர்களில் இருந்து விளாங்காய், கம்பு மற்றும் சோளம், பேரிக்காய், வாழை இலை, வாழைப்பழம், தேங்காய், பூசணிக்காய் உள்ளிட்ட பூஜை பொருட்கள் லாரிகளில் வந்து கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்துள்ளன. இந்நிலையில், மார்க்கெட் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சரியான நேரத்தில் மார்க்கெட் வளாகத்திற்குள் செல்ல முடியவில்லை எனவும், இதனால், வியாபாரம் பாதிப்பதாகவும் வியாபாரிகள் அங்காடி நிர்வாக அலுவலகத்தில் முறையிட்டனர்.
இதனையடுத்து வியாபாரிகளின் நலன் கருதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்தவும் போக்குவரத்து உதவி ஆணையர் ரவி மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் நேற்று காலை முதல் கோயம்பேடு மார்க்கெட் அருகே பணியில் ஈடுபட்டு வருகிறனர். கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் நெரிசலில் சிக்குவதை கட்டுப்படுத்த அங்காடி நிர்வாகம் சார்பில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தனித்தனியாக பிரிந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்களின் பணிகளை அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி நேரில் ஆய்வு செய்து போக்குவரத்துக்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தினார். அதேபோல் போக்குவரத்துக்கு இடையூராக வாகனங்களை நிறுத்தி பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வியாபாரிகள் தங்களது கடையில் பூஜை பொருட்களை விற்பனை செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மார்க்கெட் வளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றப்பட்டுள்ளது. அதை மீறி நடைபாதையை ஆக்கிரமித்து விபாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மார்க்கெட் வளாகத்தை 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. விதிமீறல்கள் தொடர்பாக அங்காடி நிர்வாகத்தில் புகார் அளிக்கலாம். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தை முறைப்படுத்த தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.