மெட்ரோ ரயில் பணிக்காக நாளை முதல் 30ம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் தகவல்
சென்னை, ஆக.27: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அண்ணா நகர் மண்டலம், திருமங்கலம் 100 அடி சாலையில் (15வது பிரதான சாலை சந்திப்பு மற்றும் 2வது நிழற்சாலை சந்திப்பு) பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை காலை 9 மணி முதல் 30ம் தேதி காலை 9 மணி வரை மாதவரம், கொளத்தூர், அண்ணா நகர் மேற்கு, முகப்பேர், அண்ணாநகர், வில்லிவாக்கம், சூளைமேடு, வடபழனி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.