வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீரை விரைந்து வெளியேற்ற 2,086 மோட்டார் பம்புகள் தயார்: தடையில்லா குடிநீர் 4 லட்சம் பேருக்கு உணவு தமிழக அரசு தகவல்
சென்னை, அக்.25: வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் மழைநீரை வெளியேற்ற 2,086 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி, தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை காரணமாக மக்கள் வாழும் பள்ளமான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவும் காணொலி காட்சி வாயிலாகவும் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார்.
அந்தவகையில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மழைநீர் சூழும் இடங்களை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 17ம் தேதி 179.80 மி.மீ. மழை பெய்துள்ளது. அதேபோல், 23ம் தேதி சராசரியாக 17.94 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மேடவாக்கத்தில் 93.30 மி.மீ. மழை பெய்துள்ளது. மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அளித்திடும் நோக்கில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உணவு சுகாதார வசதி, குடிநீர் வசதி முதலியவை செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன.
தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த 22 மற்றும் 23ம் தேதி 1,48,450 பேருக்கு காலை உணவும், 2,23,950 பேருக்கு மதிய உணவும் 28,000 பேருக்கு இரவு உணவும் என மொத்தம் 4 லட்சத்து 400 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. 150 எண்ணிக்கையில் 100 குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. டிராக்டர் மேல் 500 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீர் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
இதுதவிர, 2 ஆம்பிபியன், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், பல்வகை பயன்பாட்டிற்கான 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள், 3 மினிஆம்பிபியன், 7 சூப்பர் சக்கர் வாகனங்கள், 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள் உள்பட மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக 15 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள், 2 ஹைட்ராலிக் ஏணி, 224 கையடக்க மர அறுப்பான், 216 டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த அக்.17ம் தேதி முதல் 23ம் தேதி வரை மழையின் காரணமாக விழுந்த 31 மரங்களும் அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களை 1913 என்ற எண்ணிற்கும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் தொடர்பான புகார்களை 1916 என்ற உதவி எண்ணிற்கும் 24 மணி நேரமும் கட்டணமில்லாமல் தெரிவித்து தேவையான உதவிகளைப் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகளை அகற்றிட உரிய நடவடிக்கைகளை எடுக்க சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேரும் சென்னை குடிநீர் வாரியம் 2,149 களப்பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு 454 குடிநீர் வாகனங்கள் மூலம் 23ம் தேதி வரை 3181 நடைகள் வாயிலாக தடையில்லாமல் குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.