பல்லாவரம் வாரச் சந்தையில் திடீர் சோதனை காலாவதியான 500 கிலோ உணவு பொருள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
பல்லாவரம், அக்.25: பல்லாவரம் வாரச் சந்தையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு, காலாவதியான 500 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரம் பகுதியில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு, ஊசி முதல் ஏசி வரை உபயோகப்படுத்தப்பட்ட மற்றும் புதிய பொருட்கள் விற்பனை செய்யப்படும். இங்கு பொருட்கள் வாங்குவதற்காக பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி, சென்னை முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்து, தங்களுக்கு வேண்டிய பொருட்களை குறைந்த விலையில் வாங்கி செல்வது வழக்கம்.
இங்கு, பொதுமக்கள் தாங்கள் வளர்த்து வரும் ஆடு, வெளிநாட்டு நாய், பூனை, கோழி, லவ் பேட்ஸ், புறா போன்ற பறவைகள், வண்ண மீன்கள், அழகு செடிகள், காய்கறிகள், தேன், மளிகை பொருட்கள், மேசை, நாற்காலி, கட்டில், கம்ப்யூட்டர், டிவி போன்ற வீட்டு உபயோக பொருள்கள், சைக்கிள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சந்தையில் ரூ.1 கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெறுகிறது. பெரும்பாலும், சிறு வியாபாரிகளே இந்த சந்தையில் தங்களது பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், பல்லாவரம் வாரச்சந்தையில் சமீப காலமாக தரம் குறைந்த மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரமேஷ் பாபு தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவினர், பல்லாவரம் வாரச்சந்தையில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பாடி பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரது கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அங்கு காலாவதியான பிஸ்கட், மசாலா மற்றும் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களில் உற்பத்தி தேதி, காலாவதி தேதி ஆகியவை அழிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, அவரிடம் இருந்து 500 கிலோ எடையுள்ள உணவு பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஐயப்பனை பிடித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் எங்கு இதுபோன்று காலாவதியான பொருள்களை வாங்கினார் என விசாரிக்கின்றனர். பல்லாவரம் வாரச் சந்தையில் பொருட்கள் விலை குறைவாக கிடைக்கிறது என்பதை மட்டும் பார்க்காமல், அவற்றின் தரத்தை சோதித்துப் பார்த்து, பாக்கெட்டில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதியை சரிபார்த்து வாங்குமாறு அதிகாரிகள், பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.