வீட்டுக்கு செல்ல வழி தெரியாமல் தவித்த பள்ளி மாணவன் பாட்டியிடம் ஒப்படைப்பு
திருவொற்றியூர், அக்.25: மணலி புதுநகர் விச்சூர் பகுதியை சேர்ந்தவர் வில்சன் (37). ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்திம் இரவு சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வாடிக்கையாளர் வருகைக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு சிறுவன் ஒருவன் அழுதபடி நின்று கொண்டிருந்தான். இதை பார்த்த வில்சன், சிறுவனிடம் விசாரித்தபோது, பழவேற்காடு பகுதியை சேர்ந்த லோகேஷ் (12) என்பதும், எர்ணாவூர் குப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருவதாகவும், பழவேற்காட்டில் தனது தாயை பார்த்துவிட்டு அங்கிருந்து மின்சார ரயிலில் வந்ததாகவும், எண்ணூர் ரயில்நிலையத்தில் இறங்குவதற்கு பதிலாக தவறுதலாக சென்ட்ரலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளான்.
இதையடுத்து வில்சன், எண்ணூரில் உள்ள போக்குவரத்து போலீஸ் உதவி ஆய்வாளர் ராஜி என்பவருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். பின்னர், சிறுவனை ஆட்டோவில் ஏற்றி எண்ணூருக்கு அழைத்து சென்று, உதவி ஆய்வாளர் ராஜியிடம் ஒப்படைத்தார். அவர், சிறுவன் கூறிய விலாசத்தை வைத்து எர்ணாவூர் குப்பத்தில் உள்ள அவரது பாட்டி நாயகம், தாத்தா தேசிங்கு ஆகியோரிடம் லோகேஷை ஒப்படைத்தார். சிறுவனை பாதுகாப்பாக பாட்டியிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளரை காவல் உயரதிகாரிகள் பாராட்டினர். இதுபோல் ஆட்டோ டிரைவர் வில்சனையும் போலீசார் பாராட்டினர்.