செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 750 கன அடி உபரிநீர் வெளியேற்றம்
பல்லாவரம், அக்.24: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. ஏரி மொத்தம் 25.51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி, அதன் நீரின் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி ஆகும். கடந்த சில நாட்களாக சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால், ஏரிக்கு வரும் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி ஏரியின் மொத்த நீர் இருப்பு 20.97 அடியாகவும், மொத்த நீரின் கொள்ளளவு 2848 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் மழை பெய்வது குறைந்ததால், நேற்று காலை ஏரிக்கு வரும் நீரின் வரத்து 1,980 கன அடியாக குறைந்தது. மேலும், ஏரியில் 21.27 அடி உயரம் தண்ணீர் உள்ளது. ஆனாலும், ஏரியிலிருந்து 750 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* நேற்று காலை 6 மணி நிலவரப்படி, பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில், தற்போது தண்ணீர் இருப்பு 2404 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 4210 கன அடியாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2926 மில்லியன் கன அடியாக உள்ளது.
* புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2757 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 542 கன அடியாக உள்ளது. ஏரியிலிருந்து வினாடிக்கு 750 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
* சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில், தற்போது தண்ணீர் இருப்பு 526 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 795 கன அடியாக உள்ளது.
* கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 437 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 100 கன அடியாக உள்ளது.