தண்டையார்பேட்டை ரயில் நிலைய சாலையில் கொட்டப்படும் கழிவுகள்: நோய் தொற்று பரவும் அபாயம்
தண்டையார்பேட்டை, செப்.24: சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், 42வது வார்டுக்கு உட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் பகுதியில் புதிய வைத்தியநாதன் தெரு உள்ளது. தண்டையார்பேட்டை டோல்கேட், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவர்கள், பொதுமக்கள் என தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தண்டையார்பேட்டை ரயில் நிலையத்திற்கு இந்த வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில், திடீரென கடந்த சில நாட்களாக மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சேகரிக்கும் குப்பை கழிவுகளை பேட்டரி வாகனங்களில் கொண்டு வந்து இந்த பாலத்தின் கீழ் சாலையோரம் கொட்டி விட்டு செல்கிறார்கள். இதனால், குப்பை மலைபோல் குவிந்து காணப்படுகிறது.
மேலும் துர்நாற்றம் வீசுகிறது. ரயில் நிலையம் செல்லும் பொதுமக்கள் குப்பை கழிவுகள் துர்நாற்றம் வீசுவதாகவும், பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். தற்போது அடிக்கடி மழை பெய்வதால் குப்பையில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் இடமாக மாறி உள்ளது. அதேபோல், குப்பை கொட்டும் பகுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் சுற்றுச்சுவர் உள்ளது. சமூக விரோதிகள் குப்பை கழிவுகளை கொளுத்தி விட்டு சென்றால் பெரும் விபத்து ஏற்படக்கூடும். இதை கருத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் குப்பை கொட்டுவதை தடுத்து, மாற்று இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.