தாம்பரம் மாநகராட்சியில் 10 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி
தாம்பரம், ஆக.23: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் 45,000 தெரு நாய்கள் மற்றும் 4000 முதல் 5000 வரை வளர்ப்பு நாய்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஆய்வுப்படி, குறைந்தபட்சம் 70 சதவீத நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும்பட்சத்தில் நோய் கிருமி தொற்று பரவலை முற்றிலுமாக தடுக்க முடியும். எனவே, தெரு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், கடந்த 6ம் தேதி முதல் தாம்பரம் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.
இந்த முகாம், நாய் கடிக்கும்போது ஏற்படும் உயிருக்கு ஆபத்தான வெறிநோய் தடுக்க முக்கிய பங்காற்றுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ கடந்த 6ம் தேதி 3வது மண்டலம், சிட்லபாக்கம் கால்நடை மருத்துவமனை வளாகத்திலிருந்து இந்த தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தெருநாய்களுக்கு 18ம் தேதி முதல், 4வது மண்டலத்தில் வெறிநோய் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10,167 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,’’ என்றனர்.