தெருவில் கைவிடப்படுவதை தவிர்க்க நடவடிக்கை செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற டிசம்பர் 7ம் தேதி வரை அவகாசம்: மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, நவ.22: சென்னையில் 65,422 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 24,477 செல்லப்பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கிய நிலையில் காலக்கெடு வரும் 7ம் தேதி வரை என இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும், இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட நாள் முதல் ஓராண்டு காலத்திற்கு மட்டும் உரிமம் செல்லத்தக்கது என்பதை உறுதிப்படுத்தி மீண்டும் உரிமம் புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்யவும், செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதை தடுப்பதற்காகவும் செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் செலுத்தி உரிமம் பெறுவது பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மைக்ரோ சிப்பில் செல்லப்பிராணிகளின் உரிமையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தரவுகள் பதிவு செய்யப்படும்.
செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களின் வசதிக்காகவும், உரிமம் பெறுவதற்கும், வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்துதல் மற்றும் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் கடந்த அக்டோபர் 8ம் தேதி முதல் பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்களிலும், நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்திலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் இதுவரை 65,422 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 24,477 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. செல்லப் பிராணிகள் உரிமையாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில், இணையதள சேவையில் காணப்பட்ட இடர்பாடுகள் களையப்பட்டு எளிதாக உரிமம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், செல்லப்பிராணிகள் உரிமையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட வரும் 23ம் தேதி என்ற காலக்கெடுவானது, தற்போது வரும் 7ம் தேதி வரை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களிலும், சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்திலும் மைக்ரோ சிப் பொருத்துதல், வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும் தினசரி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மேற்கொள்ளப்படும். எனவே, செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் இதனைப் பயன்படுத்தி வரும் 7ம் தேதிக்குள் தங்களின் செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தைப் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.