விருத்தாசலம் மார்க்கத்தில் இயங்கும் சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் எல்.எச்.பி. பெட்டி ரயிலாக மாற்றம்: ஸ்லீப்பர் கோச்சை 5 ஆக குறைப்பதால் அதிருப்தி
சென்னை, நவ.22: விருத்தாசலம் மார்க்கத்தில் இயங்கும் சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், வரும் ஜனவரி 15ம் தேதி முதல் எல்.எச்.பி. பெட்டி ரயிலாக மாற்றப்படுகிறது. இதில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியை 8ல் இருந்து 5 ஆக குறைப்பதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்திய ரயில்வே துறையில் நீண்டதூரம் இயங்கும் ரயில்களை அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த எல்.எச்.பி. (லிங் ஹாப்மேன் புஷ்) பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றி இயக்கி வருகின்றனர். ஜெர்மன் தொழில் நுட்பத்தில் தயாராகும் எல்.எச்.பி. பெட்டிகளை படிப்படியாக முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் இணைக்கின்றனர். அந்தவகையில், சென்னை எழும்பூரில் இருந்து விருத்தாசலம் மார்க்கம் வழியே சேலத்திற்கு இயக்கப்படும் சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலை எல்.எச்.பி. பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் (22153) வரும் ஜனவரி 15ம் தேதி முதல் எல்.எச்.பி. பெட்டி ரயிலாக மாற்றம் பெறுகிறது. மறுமார்க்கத்தில் இயங்கும் சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (22154) வரும் ஜனவரி 16ம் தேதி முதல் எல்.எச்.பி. பெட்டி ரயிலாக மாற்றப்படுகிறது. இந்த ரயிலில், இரண்டடுக்கு ஏசி பெட்டி-2, மூன்றடுக்கு ஏசி பெட்டி-3, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி-5, இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லா பெட்டி-4, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி-1, லக்கேஜ் மற்றும் பிரேக் வேன்-1 என மொத்தம் 16 எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த எல்.எச்.பி. பெட்டிகள், அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. அதிவேகத்தில் ரயிலை இயக்கினாலும் அதிர்வுகள் இருக்காது. நவீன கழிவறை மற்றும் டிஸ்க்பிரேக் வசதி, தீ தடுப்பு கருவிகள், சிறந்த முறையிலான குளிர்சாதன வசதி உள்ளிட்ட அதிநவீனங்கள் உள்ளன.
இருமார்க்கத்திலும் தற்போது இயங்கும் சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரசில் (22153, 22154) இரண்டடுக்கு ஏசி பெட்டி-1, மூன்றடுக்கு ஏசி பெட்டி-3, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி-8, முன்பதிவில்லா பெட்டி-4, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி-2 இருக்கிறது. இவற்றில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளில் சேலம், ஆத்தூர், சின்னசேலம், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த அதிகப்படியான மக்கள் பயணிக்கின்றனர். 8 பெட்டிகள் இருப்பதால், தினமும் 576 பேர் இவ்வகையிலான பெட்டியில் பயணிக்க முடிகிறது.
எல்.எச்.பி. ரயிலாக மாறும்போது, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி எண்ணிக்கையை 8ல் இருந்து 5 ஆக குறைத்துள்ளனர். இரண்டடுக்கு ஏசி பெட்டி எண்ணிக்கையில் 1 அதிகரித்துள்ளனர். இதனால், சாதாரண, நடுத்தர மக்கள் கடும் பாதிப்பை சந்திக்கவுள்ளனர். இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி எண்ணிக்கையில் 3ஐ குறைத்திருக்கும் ரயில்வேயின் இந்த முடிவிற்கு பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதனால், இந்த முடிவில் மாற்றம் செய்து, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி எண்ணிக்கையை ஏற்கனவே இருப்பது போல் 8 ஆக வைத்திருக்க தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.