மணலியில் காலியாக உள்ள அரசு நிலத்தில் பஸ் நிலையம், கல்லூரி அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
திருவொற்றியூர், செப்.22: மணலி மண்டலம், 18வது வார்டு அலுவலகம் அருகே டிட்கோவுக்கு (தமிழ்நாடு தொழில்துறை) சொந்தமான காலியிடம் உள்ளது. இந்த இடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் காலியாக இருப்பதால் இங்கு செடி, கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இந்த இடத்தில் சிலர் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர். இதில் உள்ள உணவு கழிவுகளை சாப்பிடுவதற்கு பன்றிகள், நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.
இவை திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இவற்றின் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். அதுமட்டுமின்றி விஷ பாம்புகளும், ஜந்துக்களும் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் நடந்து செல்ல பீதியடைகின்றனர். இவ்வாறு பயன்படுத்தப்படாமல் உள்ள இந்த காலி இடத்தில் டிட்கோ அதிகாரிகள் மக்கள் நல திட்ட பணிகளை செயல்படுத்த வேண்டும் அல்லது சென்னை மாநகராட்சி போன்ற பிற துறையிடம் ஒப்படைத்து கல்லூரி, மாநகர பேருந்து நிலையம் போன்றவைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை இல்லை. எனவே சென் னை மாநகராட்சி மற்றும் டிட்கோ அதிகாரிகள் இந்த இடத்தை ஆய்வு செய்து மக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மணலி, மாதவரம் போன்ற பகுதிகளில் அரசு கல்லூரி இல்லாததால் இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவியர் திருவொற்றியூர், பொன்னேரி போன்ற பகுதிகளுக்கு சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது.
அதுமட்டுமின்றி பல அரசு அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. தற்போது மணலி சுற்றுவட்டார பகுதிகளில் டிட்கோவுக்கு சொந்தமான இடங்கள் பயன்படுத்தப்படாமல் காலியாக உள்ளன. இவ்வாறு பல ஆண்டுகளாக காலியாக உள்ள இந்த இடத்தை மாநகராட்சியிடம் ஒப்படைத்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.