வேறொரு ஆணிடம் அடிக்கடி செல்போனில் பேசியதால் காதல் மனைவியை கொன்ற கணவன்: திருமணமான 4 மாதத்தில் பரிதாபம்
சென்னை, நவ.19: வேறு ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசியதால் காதல் மனைவியை கணவன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் மதுராந்தகம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சரண் (24). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் மதுமிதா (19). இவர்கள் இருவரும் காதலித்து, குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி, கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு, மதுராந்தகம் பகுதியில் வசித்து வந்தனர். மதுமிதா அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதை சரண் கண்டித்துள்ளார். அதை மீறி மதுமிதா நேற்று முன்தினம் மீண்டும் செல்போனில் பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சரண், மதுமிதாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி, கோயிலுக்கு செல்லலாம் எனக்கூறி மதுமிதாவை அனந்தமங்கலம் கிராம கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அங்குள்ள மலைப் பகுதியை பார்த்துவிட்டு வரலாம் என அவரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியால் மதுமிதாவை கழுத்தறுத்து கொன்றுவிட்டு, தப்பியுள்ளார். பின்னர், அவ்வழியாகச் சென்ற கிராம மக்கள், ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து, ஒரத்தி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலைக்கு காரணம் பெண்ணின் கணவர் சரண் என்பதை அறிந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த அவரை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட மதுமிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.