கூடுதல் பணி வழங்கியதால் ஆத்திரம் தனியார் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஊழியர் சிக்கனார்
அம்பத்தூர், நவ.19: கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முகப்பேர் சாலையில், யூனியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு நேற்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ‘உங்கள் வங்கியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும்’, என தெரிவித்துள்ளார். யாரோ ஒருவர் விளையாட்டுக்கு சொல்வதாக நினைத்து, வங்கி ஊழியர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால், தொடர்ச்சியாக 4 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த மர்மநபர், வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்களை உடனடியாக வெளியேற்றினர். பின்னர், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக கொரட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் வங்கியில் சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதனால், இது வெறும் புரளி என்பது தெரிந்தது. இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், வங்கியில் பணிபுரியும் ஊழியர்களை மாலை 6 மணி கடந்தும் பணியை செய்யும்படி கட்டாயப்படுத்தியதும், இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் ஒருவர் நந்தம்பாக்கத்தில் உள்ள தனது நண்பர் மூலம் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிந்தது. இதையடுத்து, அந்த வங்கி ஊழியர் மற்றும் அவரது நண்பரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.