கல்லீரல் முறைகேடு தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை, ஆக.19: கல்லீரல் முறைகேடுக்கு யார் காரணம் என்பதை ஆராய்ந்து காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ள மருத்துவ கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணங்களை பார்வையிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கோண்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சைதாப்பேட்டையில் ரூ.28.70 கோடியில் 68,920 சதுர அடி பரப்பளவில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் உள்ளன. கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. எனவே அடுத்த மாதம் முதல் வாரத்தில் துணை முதல்வர் இந்த மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கல்லீரல் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே காவல்துறையில் புகார் தந்திருக்கிறோம். இரண்டு புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது போல, யார் காரணம் என்பதை ஆராய்ந்து காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளைத்தை சேர்ந்த 37 வயது பெண் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை என்று கூறி, சென்னையில் கிட்னியை விற்க முயற்சி செய்து, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏறப்பட்டுள்ளது. இதையடுத்து புரோக்கர்கள், தனக்கு செய்த மருத்துவ செலவுக்கான பணத்தை கேட்டு மிரட்டி கல்லீரலை விற்பனை செய்யுமாறு கூறியுள்ளனர். இந்நிலையில் கல்லீரல் கொடுத்தால் 8 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் புரோக்கர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் கல்லீரலை விற்பனை செய்த பெண் தற்போது எந்த வேலையும் செய்ய முடியவில்லை உடல் பலவீனமாகிவிட்டது என்று கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் வினித் தலைமையிலான குழு மீண்டும் கல்லீரல் விவகாரத்திலும் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.