விடுமுறைக்கு சொந்த ஊர் சென்று சென்னை திரும்பியவர்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் நெரிசல்
சென்னை, ஆக. 19: கடந்த வாரம் 15ம் தேதி சுதந்திர தின விழாவை தொடர்ந்து சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்தது. இதனால் சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் அரசு பேருந்து உள்பட பல்வேறு வாகனங்களில் சென்றனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், 3 நாள் விடுமுறை முடிந்து நேற்று காலை அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு முதல் தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பேருந்து, ஆம்னி பேருந்து உள்பட பல்வேறு வாகனங்கள் மூலம் வெளியூர் சென்றிருந்த மக்கள் சென்னை நோக்கி படையெடுத்தனர்.
இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பரனூர் சுங்கச்சாவடி முதல் தாம்பரம் வரையிலான ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. குறிப்பாக, மாமண்டூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடப்பதால், பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் நிலவியது. மேலும், பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து மறைமலைநகர், சிங்கபெருமாள் கோயில், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம் பகுதி வரை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. அனைத்து வாகனங்களும் ஊர்ந்தபடி செல்வதால், குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, பரனூர் சுங்கச்சாவடியில் திருச்சி-சென்னை ஜிஎஸ்டி சாலை மார்க்கத்தில் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு, வாகன நெரிசலை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதேபோல் கிளாம்பாக்கம் முதல் கூடுவாஞ்சேரி வரை சுமார் 5 கிமீ தூரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதுதவிர, தாம்பரம் முதல் பல்லாவரம் வரையில் கடும் வாகன நெரிசல் நிலவியது.