கார்த்திகை முதல் நாளையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரிப்பு
அண்ணாநகர், நவ.18: கார்த்திகை முதல் நாளையொட்டி நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்நிலையில், கார்த்திகை மாத முதல்நாள் என்பதால், நேற்று காலை முதலே பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக, ஒரு கிலோ மல்லி ரூ.800லிருந்து, ரூ.1,200க்கும், ஐஸ் மல்லி ரூ.600ல் இருந்து 1,050க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ.500ல் இருந்து ரூ.900க்கும், கனகாம்பரம் ரூ.500ல் இருந்து ரூ.1,800க்கும், அரளி பூ ரூ.200ல் இருந்து ரூ.300க்கும், சாமந்தி ரூ.100ல் இருந்து ரூ.150க்கும், சம்பங்கி ரூ.50ல் இருந்து ரூ.120க்கும், பன்னீர் ரோஸ் ரூ.80ல் இருந்து ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.100ல் இருந்து ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘கார்த்திகை முதல்நாள் என்பதால் காலை முதலே பூக்கள் வாங்குவதற்காக சென்னை மற்றும் புறநகர் சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால், பூக்களின் விலை உயர்ந்துள்ளது,’ என்றார்.