பெரியார் பிறந்த நாள் மாநகராட்சி பணியாளர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
சென்னை, செப்.18: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர். பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று ஆணையர் குமரகுருபரன், பெரியாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து, அவரது தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். அப்போது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைபிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத் திறனும், பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன் என உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில், துணை ஆணையர் (பணிகள்) சிவகிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேஸ்வரி, உதவி ஆணையாளர் (பொது நிர்வாகம்) உமா மகேஸ்வரி, விழிப்பு அலுவலர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.