மெட்ரோ பணிக்கான இரும்புகளை திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்
துரைப்பாக்கம், ஆக.18: துரைப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிக்கு வைத்திருந்த இரும்பு பொருட்களை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். துரைப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானம் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் கட்டுமான பணிக்காக வைத்திருந்த இரும்பு பொருட்கள் மற்றும் அலுமினிய ஏணியை திருடிக் கொண்டு புறப்பட தயாராகினர்.
அப்போது அங்கிருந்த காவலாளி மற்றும் ஊழியர்கள், அந்த 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இருசக்கர வாகனம் மற்றும் திருடிய இரும்பு பொருட்களுடன் துரைப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந்த கார்த்தீஸ்வரன் (24), ராஜமுத்துகுமரன் (19) என தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து சுமார் 45 கிலோ இரும்பு பொருட்கள் மற்றும் அலுமினிய ஏணி மீட்கப்பட்டது. இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இருவர் மீதும் ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதில் கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.