கட்டுமான பணிகள் காரணமாக ஆவடி பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றம்: போக்குவரத்து கழகம் தகவல்
சென்னை, செப்.14: கட்டுமான பணிகள் காரணமாக ஆவடி பேருந்து நிலையம் இன்று முதல் தற்காலிகமாக மாற்றப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும திட்டத்தின் கீழ், ஆவடி பேருந்து முனையத்தை நவீனபடுத்தி புதிய பேருந்து முனையமாக மாற்றி அமைக்க கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதால், இப்பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகள் மற்றும் இங்கு செயல்பட்டு வந்த மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையம் இன்று முதல் இப்பேருந்து நிலையத்திற்கு எதிரில் எம்.டி.ஹச் சாலையில் 100 மீட்டர் தொலைவில் உள்ள காலி இடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்படும். எனவே, இப்பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்ட அனைத்து பேருந்துகளும் மேற்குறிப்பிட்ட தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் கட்டுமான பணிகள் முடியும் வரை இந்த தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்தே பேருந்துகள் இயக்கப்படும் மற்றும் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையமும் செயல்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.