பெண்ணுக்கு பாலியல் தொல்லை பாஜ பிரமுகர் மீது வழக்குப்பதிவு
ஆலந்தூர், செப்.14: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜ பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆதம்பாக்கம், பெரியார் நகரை சேர்ந்தவர் மலர் (40). இவர் அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பாஜ மண்டல செயற்குழு உறுப்பினரும், ஆட்டோ ஓட்டுநருமான நடராஜன் (51), பூக்கடை அருகே, ஆட்டோவை நிறுத்தும் போதெல்லாம் மலரிடம் இரட்டை அர்த்ததுடன் பேசிய வந்துள்ளார். இதனை மலர் கண்டுகொள்ளாமல் இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை நடராஜன் மலரின் கையை பிடித்து இழுத்து அநாகரீகமாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் கொன்று விடுவேன், என எச்சரித்துள்ளார். இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் மலர் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் நடராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.