சிறுமியை கட்டிபோட்டு வன்கொடுமை முயற்சி 15 சந்தேக நபர்களிடம் போலீசார் விசாரணை
அண்ணாநகர், ஆக. 14: அண்ணாநகரில் சிறுமியை கட்டிபோட்டு வன்கொடுமை முயற்சி செய்த வழக்கில் 15 சந்தேக நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 47 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: அதிகாலை 2.30 மணியளவில் எனது மகள் வீட்டின் அருகே உள்ள கழிப்பறைக்கு சென்றபோது மர்ம நபர்கள் இருவர் திடீர் என்று வாயை பொத்தி கட்டி போட்டு பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டனர். எனது மகள் கூச்சலிட்டதால் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். எங்கள் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, மேற்கு இணை ஆணையர் உத்தரவின்படி 3 உதவி ஆணையர்கள், 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 6 தனிப்படை அமைக்கப்பட்டு தனிதனி குழுவாக போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர். அதேபோல் சிறுமியின் வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா நியமிக்கப்பட்டார். முதல்கட்டமாக சிறுமி வீட்டின் அருகே உள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்னர். சம்பவ நேரத்தில் அவ்வழியாக சென்ற 15 சந்தேக நபர்களை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் சிறுமியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் நண்பர்களிடம் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.