மணி எக்சேஞ்ச் நிறுவனத்தில் ரூ.1.48 லட்சம், லேப்டாப் திருடிய ஊழியர் கைது
சென்னை, ஆக. 14: சூளைமேடு பகுதியில் கடன் தொல்லையால் மணி எக்சேஞ்ச் நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் ரொக்கம், லேப்டாப் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம்(24). இவர் அதே பகுதியில் மணி எக்சேஞ்ச் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி இரவு நிறுவனத்தை பூட்டிவிட்டு மறுநாள் காலையில் திறக்க வந்த போது, பூட்டு திறந்து கிடந்ததை பார்த்து உள்ளே சென்றார். அப்போது, அவரது கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ.1.48 லட்சம் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த லேப்டாப் மாயமாகி இருந்தது. இதுகுறித்து அப்துல் கரீம் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தியபோது, அப்துல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் எம்.கே.பி.நகரை சேர்ந்த அவரது நண்பர் சரத்(22) பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சரத்தை பிடித்து விசாரித்தனர். அதில், கடன் தொல்லை காரணமாக பணம் மற்றும் லேப்டாப் திருடியதாக ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து போலீசார் சரத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர்.