ஆன்லைன் செயலியில் பழகி இளம்பெண் பலாத்காரம் கன்னியாகுமரி வாலிபர் கைது
தண்டையார்பேட்டை, நவ.13: ஆன்லைன் செயலியில் பழகி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கன்னியாகுமரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மோஜ் என்ற செயலி மூலமாக நண்பர்களோடு பழகி வந்தார். அந்த வகையில் கன்னியாகுமரியை சேர்ந்த லிபின் ராஜ் என்ற வாலிபர் இளம் பெண்ணுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் செயலி மூலம் அறிமுகமானார். ஆரம்பத்தில் நட்பாக பழகிய லிபின் ராஜ் நாளடைவில் இளம்பண்ணுக்கு காதல் வலை விரித்தார். வீடியோ காலில் பேசும்போது லிபின்ராஜ் இளம்பெண்ணை ஆடையில்லாமல் பேச சொல்லி ஆபாசமாக புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் இளம்பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய லிபின் ராஜ் உன்னை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து வைத்துள்ளேன். நான் சொல்வதை கேட்காவிட்டால் அந்த புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு விடுவேன், என்று மிரட்டினார். மேலும், இளம்பெண்ணை பெரிய மேடு லாட்ஜுக்கு வந்துவிடு, நாம் இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து, இளம்பெண் பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜுக்கு சென்றார். அங்கு லிபின் ராஜ் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதேபோல், பலமுறை இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய லிபின் ராஜ் மீண்டும் லாட்ஜுக்கு அழைத்தார்.
அப்போது, இளம்பெண் தனது பாட்டி இறந்து 3 நாட்கள் தான் ஆகிறது, என்னால் வர முடியாது என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த லிபின் ராஜ் இளம் பெண்ணின் ஆபாச புகைப்படங்களை அவரது தாயாரின் செல்போனுக்கு அனுப்பினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தாயார் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி ஆணையர் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் கன்னியாகுமரிக்கு சென்று ஆட்டோ ஓட்டுநரான லிபின் ராஜை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.