நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 1,148 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
பெரம்பூர், செப்.13: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மூலக்கொத்தளம் எம்.எஸ் நகரில் ரூ.46.56 கோடியில் 308 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பணிகள் முடிந்து நேற்று மாலை மக்கள் பயன்பாட்டிற்காக குடியிருப்பு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு வீடு ஒதுக்கீடு ஆணையை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பழைய வியாசர்பாடி திட்ட பகுதியில் ரூ.34.61 கோடியில் 192 புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக அவர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை துணை முதல்வர் வழங்கினார். மேலும், வியாசர்பாடி மூர்த்திங்கர் தெரு திட்ட பகுதியில் ரூ.88.02 கோடியில் 648 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: வீடு என்பது உங்கள் பல நாள் கனவு, உரிமை. அதை தமிழக முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார். இந்த குடியிருப்பு பகுதி கட்டி முடிக்கும் வரை நீங்கள் வெளியில் தங்கும் போது உதவித்தொகையாக முதல்கட்டமாக 8 ஆயிரம் ரூபாய் அளித்தார். மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப இரண்டாவது கட்டமாக 24 ஆயிரம் என உயர்த்தி அளித்தார் முதலமைச்சர். வீடு மட்டுமில்லாமல் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளார். கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் சில மகளிர் விடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், முகாம்கள் நடைபெற்று வருகிறது அதில் 40% கலைஞர் உரிமை.
தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து உள்ளார்கள். தமிழக முதலமைச்சர் இந்த திட்டத்தில் சில தளர்வுகளையும் செய்து இருக்கிறார்கள். எனவே விடுபட்ட நபர்களுக்கு கண்டிப்பாக மகளிர் உதவித்தொகை கிடைக்கும். நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், மாநகராட்சி நிலை குழு தலைவர் இளைய அருணா, சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், ராயபுரம் கிழக்கு பகுதி இளைஞரணி அமைப்பாளர் சாந்தகுமார், மாவட்ட துணைச் செயலாளர் கமலக்கண்ணன், பகுதி செயலாளர் நரேந்தர், செந்தில்குமார், முருகன், ஜெயராமன், கருணாநிதி, வேதா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.