தூய்மைப்பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் பணி பாதுகாப்பு, பணப்பலன் வழங்குவது உறுதி செய்யப்படும்: போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப மாநகராட்சி அறிவுறுத்தல்
சென்னை, ஆக.13: தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் தனியார் நிறுவனம் மூலமாக பணி பாதுகாப்பு மற்றும் பணப்பலன்கள் வழங்குவது உறுதி செய்யப்படும் என திட்டவட்டமாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலம் 5 மற்றும் 6) திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தனியார் நிறுவனத்தின் வாயிலாக, கடந்த ஜூலை 16ம் தேதி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 1ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் சுய உதவிக் குழுவின் வாயிலாக பணியாற்றும் தற்காலிக தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் கடந்த 6ம் தேதி அன்றும், அதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராலும் சென்னை மாநகராட்சி ஆணையர், இணை ஆணையர் (சுகாதாரம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோராலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளுடன் 12க்கும் மேற்பட்ட சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது, சென்னை மாநகராட்சியில் கடந்த 2020ம் ஆண்டில் மண்டலம் 1, 2, 3 மற்றும் 7ல் பகுதி (3 வார்டுகள்), 9, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய மண்டலங்களில் தூய்மைப்பணி முறை மாற்றப்பட்டபோது அந்த மண்டலங்களில் பணிபுரிந்து வந்த சுய உதவிக்குழுக்களின் தற்காலிக தூய்மைப்பணியாளர்கள், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியில் சேர்ந்து, பணியாற்றி வருவதைப்போல, மண்டலம் 5 மற்றும் 6ல் தற்போது பணியாற்றி வரும் தற்காலிக தூய்மைப்பணியார்களும் உரிய பணி பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளுடன் பணியில் சேர்ந்து, தங்களது பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளும், தொழில் தீர்ப்பாயத்தில் முறையீடுகளும் செய்யப்பட்டுள்ளதால், அவற்றின் மீது வரும் முடிவுக்குட்பட்டு, தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மண்டலம் 5 மற்றும் 6ல் வசிக்கும் மற்றும் வந்து செல்லும் ஏறத்தாழ 20 லட்சம் பொதுமக்களுக்கான பொது சுகாதார சேவைகள் பாதிக்கப்படுவது மிக முக்கியமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. போராட்டம் தொடர்வதால் இந்த மண்டலங்களில் தூய்மைப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு குப்பை தேங்கி மக்களுக்கு பெரும் சுகாதார பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு சென்னை மாநகராட்சிக்கு உள்ளதால் இதற்கான அனைத்து முயற்சிகளையும் சென்னை மாநகராட்சி தொடர்ந்து எடுத்து வருகின்றது.
இதுநாள் வரை சுய உதவிக் குழுக்கள் மூலமாகவே பணியில் ஈடுபடுத்தப்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்கள், தற்போது தனியார் நிறுவனத்தில் தொழிலாளர் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு பணியாளர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே இந்த புதிய முறையின்கீழ் இதுவரை கிடைக்காத பணிப்பாதுகாப்பும் பல சலுகைகளும் இந்த பணியாளர்களுக்கு கிடைத்திட வழி ஏற்பட்டுள்ளது. இப்பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, ஊழியம் மற்றும் மருத்துவக் காப்பீடு, போனஸ், பண்டிகை கால சிறப்பு உதவிகள், திருமண உதவித்தொகை மற்றும் கல்வி/ உயர்கல்வி உதவித்தொகை, இன்சூரன்ஸ் திட்டத்தில் விபத்து மரணம்/ இயற்கை மரணம் உள்ளிட்டவற்றிற்கு நிவாரண இழப்பீடு நிதியும் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.
மேலும், திருமண உதவித் தொகை ரூ.20,000 வரை, கல்வி உதவித் தொகை - ரூ. 12,000 வரை, மரண நிகழ்வுக்கான நிதி உதவி, புத்தக நிதி உதவி, கணினி பயிற்சி நிதி உதவி வழங்கப்படுகிறது. அத்துடன், தற்செயல் விடுப்பு-12 நாட்கள் (பணமாக மாற்றும் வசதியும் உண்டு), ஈட்டிய விடுப்பு - 12 நாட்கள் (பணமாக மாற்றும் வசதியும் உண்டு), தேசிய விடுமுறை நாட்கள் (இரட்டிப்பு சம்பளம் பெரும் வசதியும் உண்டு) வழங்கப்படுகிறது. பணியாளர்கள் இந்த நாட்களில் பணி செய்யாவிட்டாலும் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் பெறும் வசதி உண்டு. மேலும் இலவச சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், காலணிகள், மழைக்கால உடை மற்றும் சுகாதார பொருட்களும் வழங்கப்படுகின்றன. இதனுடன் தமிழ்நாடு அரசின் தூய்மைப் பணியாளர் நலவாரியம் மூலமாக பல்வேறு உதவிகள் மற்றும் சலுகைகளும் வழங்கப்படும்.
மேற்கூறிய பணி மற்றும் ஊதிய விவரங்கள் குறித்து விரிவாக தற்காலிக பணியாளர்களின் பிரிவினர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுவின் மூலமாக பணிகளை செய்து வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும், தனியார் நிறுவனம் பணியில் சேர்ப்பதையும் அவர்களுக்கு உரிய பணிப்பாதுகாப்பு மற்றும் பணப் பலன்கள் வழங்குவதையும் பெருநகர சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பொதுநலன் கருதியும், தங்களது பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்து கொண்டும், உயர் நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு மற்றும் தொழில் தீர்ப்பாயத்தின் முடிவுகளை எதிர்நோக்கி, உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.