கள்ளக்காதலுக்காக விஷம் கொடுத்து குழந்தைகள் கொலை ஆயுள் தண்டனையை எதிர்த்து குன்றத்தூர் அபிராமி மேல்முறையீடு: காவல்துறை பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக. 13: கள்ளக்காதலுக்காக குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து குன்றத்தூர் அபிராமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். குன்றத்தூரைச் சேர்ந்த விஜய் அபிராமி தம்பதி. இவர்களுக்கு 6 மற்றும் 4 வயதுகளில் 2 குழந்தைகள் இருந்தனர். அபிராமி வீட்டில் இருந்தபடி டிக்டாக்கில் வீடியோ போட்டு பிரபலமானார். இவரது வீடியோவை பார்த்து, அதேபகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றிய மீனாட்சி சுந்தரத்துக்கும், அபிராமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் கள்ளகாதலாக மாறியது. இந்த கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இருவரும் இடையூறாக இருந்ததால், அவர்களை கொலை செய்ய அபிராமியும், மீனாட்சி சுந்தரமும் முடிவு செய்து பாலில் விஷம் கலந்துக் கொடுத்து குழந்தைகளை கொன்றனர். பின்னர், இருவரும் கேரளாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது போலீசார் கைது செய்து இருவர் மீதும் கொலை, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அபிராமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு பதில் அளிக்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.