தன்னுடன் பழகுவதை நிறுத்தியதால் ஆத்திரம் சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து பெண்ணுக்கு மிரட்டல்: தூத்துக்குடி ஆசாமி கைது
சென்னை, அக்.12: நெற்குன்றத்தை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், கடந்த மே 28ம் தேதி மேற்கு மண்டலம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தூத்துக்குடி மாவட்டம், முனியசாமிபுரம், சுடலை காலனியை சேர்ந்த கோபி (42) என்பவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் ஆபாசமாக பேசியதால் தொடர்பை துண்டித்து அவரது செல்போன் எண்ணை பிளாக் செய்தேன். அவர், எனது புதிய செல்போன் எண், எனது மகள்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் செல்போன் எண்களை கண்டுபிடித்து, என்னையும், எனது இரு மகள்கள் பற்றியும் அவதூறான செய்திகளை வாட்ஸ்அப் மூலம் அனைவருக்கும் அனுப்பினார்.
அவர்களின் செல்போன் எண்களை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து பதிவேற்றம் செய்தார். மீண்டும் அவருடன் பழகவில்லை என்றால் தொடர்ந்து பிரச்னை செய்வதாக மிரட்டினார். எனவே கோபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்தார். அதன்பேரில், கடந்த மே 30ம் தேதி கோபியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின்னர், கடந்த ஜூலை 11ம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த கோபி, போலியாக சமூகவலைதள பக்கங்களை உருவாக்கி, அதில் பெண்ணின் மகளின் செல்போன் எண்ணையும், பெண்ணின் பெயரையும், மகளின் தோழியின் செல்போன் எண்ணையும் ஆண் நபர்களுக்கு அனுப்பும் வகையில் பதிவேற்றம் செய்துள்ளார், இதுகுறித்து செப்டம்பர் 23ம் தேதி மேற்கு மண்டலம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் கோபியை தூத்துக்குடியில் வைத்து போலீசார் மீண்டும் கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான கோபி நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.