அதிகரித்து வரும் நெரிசலுக்கு தீர்வாக பாலாற்றின் குறுக்கே புதிய பாலம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்
சென்னை, செப்.12: அதிகரித்து வரும் நெரிசலுக்கு தீர்வாக பாலாற்றின் குறுக்கே புதிய 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும், என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றிய புறநகர் மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் சார்பில் புதிய சாலைகள் அமைப்பது, பழைய சாலைகள் சீரமைப்பு போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலை முடிவு செய்து உள்ளது. அந்த சாலை பாலத்தால் சென்னை-திருச்சி வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.
சென்னை - திருச்சி தேசிய ெநடுஞ்சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. இந்த சாலையில், செங்கல்பட்டு பாலாறு ஆற்றின் குறுக்கே, 1954 மற்றும் 1983ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட 2 பாலங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவை கட்டுமான ரீதியில் வலுவானவையாக இருந்தாலும், அகலம் குறைவாக இருப்பதால் ஒரே நேரத்தில் அதிகமான வாகனங்களை சமாளிக்க முடியாமல், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள பாலங்களின் அகலம் சுமார் 6.5 மீட்டர் மட்டுமே என்பதால், தினசரி அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்திற்கு போதுமானதாக இல்லை.
தற்போது, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் செங்கல்பட்டு - திண்டிவனம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாலாறு ஆற்றின் குறுக்கே புதிய 4 வழி பாலம் கட்டப்படவுள்ளது. புதிய பாலம் திருச்சி நோக்கி செல்லும் போக்குவரத்திற்காக ஒதுக்கப்படும். அதே நேரம், சென்னை நோக்கி திரும்பும் வாகனங்கள் தற்போதுள்ள பழைய பாலங்கள் வழியாகவே செல்லும். புதிய மற்றும் பழைய பாலங்கள் இணைக்கப்பட்டதும், சாலை அகலம் 8 வழி சாலைக்கு இணையாக விரிவடையும். இதனால், பயணிகள் சீரான போக்குவரத்தை அனுபவிக்க முடியும். இந்த சாலை மற்றும் பாலம் தொடர்பான பணிகள் ரூ.2,300 கோடி மதிப்பிலான பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘இத்திட்டத்திற்கான டெண்டர் டிசம்பர் மாதத்திற்குள் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாலம் கட்டுமானம் நிறைவடைய 3 ஆண்டுகள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், திட்டத்தின் கீழ் மொத்தம் 35 சந்திப்புகள் அடங்கிய விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சாலையில் தினசரி சுமார் 70,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் தாம்பரம், மறைமலை நகர் பகுதிகளில் மட்டும் 1.25 லட்சம் வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், சாலை நெரிசல் தீவிரமாக உள்ளது. எனவே, சாலையின் அகலம் குறைவாக இருப்பதால் தினசரி போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டு வந்தது. புதிய பாலம் மற்றும் சாலை விரிவாக்கம் நிறைவு பெற்றதும், செங்கல்பட்டு மாவட்டத்தைத் தாண்டி, மொத்தம் 11 மாவட்ட மக்கள் நேரடியாக பயன் பெறுவார்கள் என நெடுஞ்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,’’ என்றனர்.