விதிமீறி கட்டப்பட்ட 4 கட்டிடங்களுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை
பெரம்பூர், ஆக.12: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பாரதிதாசன் தெருவில் உள்ள கலைச்செல்வி என்பவருக்கு சொந்தமான கட்டிடம் விதிமீறி கட்டப்பட்டு இருப்பதாக, மாநகராட்சிக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் மேற்கண்ட கட்டிடத்தில் ஆய்வு செய்தபோது, விதிமீறி கட்டுமானம் நடைபெற்றது தெரியவந்தது. இந்நிலையில், தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி ராஜ்குமார், செயற் பொறியாளர் அரிநாத், உதவி செயற் பொறியாளர் சேகர், உதவி பொறியாளர்கள் பிரகாஷ், பாலச்சந்தர், பார்த்திபன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று, அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தனர். இதேபோல், கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் மீனாம்பாள் சாலையில் ஜாவித் முகமது என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம் மற்றும் எம்கேபி நகர் மேற்கு அவன்யூ சாலையில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம், கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் இனியன் என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம் ஆகியவை விதிமீறி கட்டப்பட்டது தெரியவந்ததால், அவற்றுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளை மாநகராட்சி வகுத்து கொடுத்துள்ளதாகவும், அதை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் சீல் வைக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.