சென்னை விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, நவ. 11: சென்னை, விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு கடந்த சனிக்கிழமை காலை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக, மர்ம இ-மெயில் வந்தது. இதையடுத்து ஞாயிற்றுக் கிழமை காலை, கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மர்ம இமெயில் வந்தது. இரண்டு நாட்களிலும், சென்னை விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு படையினர் தீவிர சோதனைகள் நடத்தினர். ஆனால் 2 நாட்கள் வந்த இ-மெயில்களும், புரளி என்று தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று 3வது நாளாக, ஒரே நேரத்தில், இரண்டு விமானங்களுக்கு அதை போல் வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் வந்தன. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வரும் ஏர் ஏசியா விமானம், ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் இருந்து, சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 விமானங்களில், வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விமானங்கள், சென்னையில் வந்து தரை இறங்கியதும் குண்டுகள் வெடிக்கும் என்றும் அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு படையினர், அதிரடி படை வீரர்கள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் ஏசியா பயணிகள் விமானம், மற்றும் அபுதாபியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகளோ அல்லது சந்தேகப்படும் படியான பொருட்களோ எதுவும் இல்லாததால், இது வழக்கமான புரளி தான் என்று தெரியவந்தது.