19 மண்டல அலுவலக பகுதிகளில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல் நீக்கம் செய்ய சிறப்பு முகாம்
சென்னை, செப். 11: குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் 13ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. பொது விநியோக திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வருகிற 13ம் தேதி (சனி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோக திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலை கடைகளில் பொருள் பெற நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.