அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது
தண்டையார்பேட்டை, செப்.9: கொருக்குப்பேட்டையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம், திருவிக நகர் மண்டலத்தில், தூய்மை பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை எதிரே கடந்த மாதம் 13 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை இரவோடு இரவாக போலீசார் அப்புறப்படுத்தினர். இந்நிலையில், நேற்று மாலை திடீரென கொருக்குப்பேட்டை சிகரெந்த பாளையம் ராஜீவ் காந்தி நகர் 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று தூய்மை பணியாளர்களிடம் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்தனர். அப்போது, 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 13 பேர் சிகப்பு புடவை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி அண்ணாநகருக்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.