பல்லாவரம் அரசு பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது
பல்லாவரம், செப். 9: பல்லாவரம் மறைமலை அடிகள் அரசுப்பள்ளியில் ஆசிரியர் பத்மநாபன், நல்லாசிரியர் விருது பெற்றார். முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த தினமான செப்டம்பர் 5ம்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது தமிழக அரசால் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு தமிழகம் முழுவதும் 386 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில், கடந்த 5ம்தேதி வழங்கினார். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 9 ஆசிரியர்கள், இந்த நல்லாசிரியர் விருதினை பெற்றனர். இதில், பல்லாவரத்தைச் சேர்ந்த, மறைமலை அடிகள் அரசுப்பள்ளியில் கணினி ஆசிரியராக பணிபுரிந்து வரும் பத்மநாபன் என்ற ஆசிரியருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. இவர், இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர் நலனின் மிகுந்த அக்கறையோடு, தனது கல்விப் பணியை திறம்பட செய்திட இவ்விருது தனக்கு மிகுந்த ஊக்கமளித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.