சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்பை தடுக்க புதிய குளங்கள் அமைத்தல் ஏரி புனரமைப்பு பணி தீவிரம்: மாநகராட்சி நடவடிக்கை
சென்னை, டிச. 7: சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழையால் ஏற்படும் மழைநீர் பாதிப்பை தவிர்த்து மழைநீரைச் சேமித்திடும் வகையில் புதிய குளங்கள் அமைத்தல், ஏற்கனவே உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளுதல், மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் பருவமழையை முன்னிட்டு ஆறுகள், நீர்வழி கால்வாய்களை தூர்வாரி அதன் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டி தொட்டிகள் அமைத்தல், அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய்கள் மற்றும் வண்டல் வடிகட்டி தொட்டிகளில் தூர்வாரும் பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் பருவமழையின்போது குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுத்து, மழைநீரை சேமித்திடும் வகையில் மாநகராட்சிப் பகுதிகளில் விளையாட்டு மைதானங்கள் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் கொள்ளளவை அதிகரிக்கும் பணிகளையும் மக்கள் பயன்படுத்தும் வகையில் குளத்தினைச் சுற்றி புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல், பூங்காக்களில் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்குதல், புதிதாக குளங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், வியாசர்பாடி, பழைய கூட்ஸ் ஷெட் சாலையில் உள்ள ரயில்வே குளத்தில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த குளம் 2.51 ஏக்கர் பரப்பளவில் 3 மீட்டர் ஆழத்தில் 2.77 கோடி லிட்டர் நீரை சேமிக்கும் வகையில் இருந்தது. இந்த குளத்தின் நீர் சேமிப்புத் திறனை அதிகரித்து, அருகிலுள்ள பகுதிகளைச் சுற்றிலும் மழைக்காலங்களில் நீர்த்தேக்கத்தை தவிர்க்கும் வகையிலும், குளத்தைச் சுற்றியுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல், குளத்தில் கொட்டப்பட்டிருந்த கட்டுமானக் கழிவுகள் அகற்றுதல், தூர்வாரி ஆழப்படுத்துதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல், குளத்தில் நீர் சேரும் வகையில் அருகிலுள்ள கால்வாய்களை இணைக்கும் வகையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நீர் சேமிக்கும் திறனை கூடுதலாக 7.13 பரப்பளவு ஏக்கர் அளவில் 3மீட்டர் ஆழம் அளவில் 8.93 கோடி லிட்டர் நீரை சேமிக்க அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூடுதலாக நீரை சேமிக்கும் வகையில் மேலும், 7.13 ஏக்கர் பரப்பளவில் 3 மீட்டர் ஆழத்தில் 8.93 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் குளத்தின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மொத்தம் 9.64 ஏக்கர் பரப்பளவில் 11.70 கோடி லிட்டர் 2.5 மீ. ஆழத்துடன் 1,17,090 கனமீட்டர் கொள்ளளவு உடையதாக இந்த குளம் உருவாக்கப்பட்டு இக்குளத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் தங்களது குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏதுமின்றி பெரிதும் பயனடைந்துள்ளனர். இதே போல், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட கார்கில் நகரில் பயன்பாடற்ற நிலத்தில் புதிதாக நமக்கு நாமே திட்ட நிதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளம் 9.95 ஏக்கர் பரப்பளவில் 28,432 கனமீட்டர் கொள்ளளவு நீர்த்தேக்கத் திறனுடன் உள்ளது.
இந்தக் குளத்தில் கரைகளைப் பலப்படுத்துதல், நுனிச்சுவர் மற்றும் கற்கள் பதித்தல் , கரைகளைப் பலப்படுத்துதல், அருகிலுள்ள பகுதிகளிலிருந்து நீர் சேரும் வகையில் கட்டுமானப் பணிகள் , நீர் வெளியேறும் இடத்தில் மதகு வாயில் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இக்குளத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் தங்களது குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏதுமின்றி பெரிதும் பயனடைந்துள்ளனர். இதேபோல், மணலி மண்டலத்திற்குட்பட்ட கடப்பாக்கம் ஏரியில் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி நிதியில் ரூ.58.33 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குளம் 134.89 ஏக்கர் பரப்பளவில் 13.4 சதுர கிலோ மீட்டர் நீர்ப்பிடிப்பு பகுதியுடன் 4 முதல் 8 மீ. ஆழத்துடன் 1.2 மில்லியன் கனமீட்டர் நீர் கொள்ளளவு திறனுடன் இருந்தது. தற்போது இது 1.9 மில்லியன் கனமீட்டர் நீர் கொள்ளளவு திறனுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றுதல், 7.2 லட்சம் கனமீட்டர் பரப்பளவில் வண்டல் மண் அகற்றி தூர்வாருதல், 3,450 மீட்டர் நீளத்திற்கு கரைகள் அமைத்து பலப்படுத்துதல், நீர் உள்ளே வரும் கால்வாய்கள், வெளியேறும் மதகுகள் மற்றும் உபரிவடிகால்களைப் புதுப்பித்தல், 5 ஏக்கர் பரப்பளவில் பறவை தீவு மற்றும் பல்லுயிர் வாழ்விடங்களை உருவாக்குதல். வண்டல் மண்ணைக் குறைப்பதற்கும் நீரின் தரத்தை மேம்படுத்துவதற்கும் நுழைவாயிலில் ஆழமற்ற குளம் உருவாக்குதல், பசுமைத் தோட்டங்களுடன் கூடிய பகுதிகள், பசுமைப் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் தாவரங்கள் நடுதல், நடைபாதை, இருக்கைகள் மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதி, பட்டாம்பூச்சி மற்றும் தட்டாம்பூச்சி பன்முகத்தன்மைக்கு பிரத்யேக இடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
புதிதாக 4 குளங்கள்: அடையாறு மண்டலம், கிண்டி, ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் 14,070 கன மீட்டர் (அ) 0.50 மில்லியன் கன அடி கொள்ளளவு தண்ணீர் தேக்கம் கொண்ட ஏற்கனவே உள்ள 2 குளங்களில் அகலப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 19,560 கனமீட்டர் (அ) 0.69 மில்லியன் கன அடி கொள்ளளவு தண்ணீர் தேக்கும் திறனுடன் புனரமைக்கப்பட்டது. மேலும், சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக 4 குளங்கள் 1,10,800 கன மீட்டர் (அ) 3.91 மில்லியன் கன அடி கொள்ளளவு தண்ணீர் தேக்கும் திறனுடன் கடந்த ஆண்டில் அமைக்கப்பட்டது. மேலும், இந்த 4 குளங்களின் கொள்ளளவினை இரட்டிப்பாக அதிகரிக்கும் வகையில் இந்த ஆண்டில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 49,072 ச.மீ. பரப்பளவில், 2,45,360 கனமீட்டர் (அ) 8.66 மில்லியன் கன அடி கொள்ளளவுத் திறனுடன் 24.53 கோடி லிட்டர் மழைநீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக கிண்டி, மடுவின்கரை, வேளச்சேரி, வேளச்சேரி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதி மக்கள் மற்றும் ஐந்து பர்லாங் சாலை ஆகிய பகுதிகளில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏதுமின்றி இப்பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.