கணக்கீட்டு படிவம் வீடு வீடாக சென்று வழங்கும் பணி தீவிரம் எஸ்ஐஆர் குறித்த சந்தேகங்களுக்கு ‘1950’ எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
சென்னை, நவ.7: சென்னையில் கணக்கீட்டுப் படிவம் வீடு வீடாக சென்று வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், எஸ்ஐஆர் குறித்த சந்தேகங்கள் இருந்தால் ‘1950’ என்ற எண்ணில் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம், என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த 4ம்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது’. சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் நடவடிக்கையாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவம் கடந்த 4ம்தேதி முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதியில் 2,35,272 வாக்காளர்களுக்கு 238 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 2,97,526 வாக்காளர்களுக்கு 284 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,90,653 வாக்காளர்களுக்கு 238 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் என சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 40,04,694 வாக்காளர்களுக்கு 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.2 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் என 1859 வாக்குச்சாவடி நிலை மேற்பார்வையாளர்கள் இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள உதவுவார்கள். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களின் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய அச்சிடப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தின் 2 நகல்களை ஒவ்வொரு வாக்காளருக்கும் வழங்குவார்கள்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது கைகளில் கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலினை உடன் கொண்டு வந்து, இப்படிவத்தினை நிரப்புவதற்கு உதவிடுவார்கள். கணக்கெடுப்பின்போது, வாக்காளரின் வீடு பூட்டியிருந்தாலும் அல்லது வெளியே சென்றிருந்தாலும் கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்கள் பெற்று பூர்த்தி செய்வதற்கும், பூர்த்தி செய்த படிவங்களை மீளப் பெறுவதற்கும் அவ்வீட்டிற்கு வாக்குச்சாடி நிலை அலுவலர்கள் 3 அல்லது 4 முறை சென்று இப்பணியினை மேற்கொள்வார்கள். வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 2 கணக்கீட்டுப் படிவத்தில் ஒன்றினை தாங்கள் வைத்துக் கொண்டு, மற்றொன்றினை தங்களது வீட்டிற்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கிட வேண்டும். அவ்வாறு பெறப்படும் கணக்கீட்டுப் படிவத்திற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலரால் ஒப்புதல் வழங்கப்படும்.
இந்த பணியானது வரும் டிசம்பர் 4ம்தேதி வரை நடைபெறும். எனவே, வாக்காளர்கள் எவ்வித பதற்றமுமின்றி தங்களது படிவங்களை பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அன்றைய தேதி வரை வழங்கிடலாம். இப்படிவங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய அலைபேசி செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்படும். வாக்காளர்கள் பூர்த்தி செய்த கணக்கீட்டுப் படிவங்கள் அனைத்தும் டிசம்பர் 4ம்தேதிக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மீள பெறப்படும். அவ்வாறு பெறப்படும் படிவங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
டிசம்பர் 9 முதல் ஜனவரி 8ம்தேதி வரை பெயர்களை சேர்த்தல் மற்றும் மறுப்பு தெரிவித்தல், டிசம்பர் 9ம்தேதி முதல் ஜனவரி 31ம்தேதி வரை அறிவிப்பு காலம் விசாரணை மற்றும் சரிபார்த்தல், பிப்ரவரி 7ம்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியினை சிறப்பாக முடித்திட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்கிட, கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வாக்காளர்களுக்கு இந்த சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்த சந்தேகங்கள் ஏதும் இருப்பின், ‘1950’ என்ற கட்டணமில்லா தேர்தல் கட்டுப்பாட்டு தொலைபேசி எண்ணில் வாக்காளர்கள் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.