சென்னையில் ஏஐ மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்
சென்னை, ஆக.7: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தவும், 165 முக்கிய சந்திப்புகளில் புதிய ஸ்மார்ட் டிராபிக் சிக்னல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த புதிய அமைப்பு, வாகனங்கள் அதிகம் உள்ள பாதைகளில் பச்சை விளக்கு 120 வினாடிகள் வரை நீடிக்கும்; வாகனங்கள் குறைவாக உள்ள இடங்களில் 30 வினாடிகளாக குறையும். அதன்படி, இந்த அமைப்பு முதலில் சென்னையின் முக்கிய பாதைகளான அண்ணா சாலை, ஜவஹர்லால் நேரு சாலை, சர்தார் படேல் சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, டெய்லர்ஸ் சாலை ஆகியவற்றில் செயல்படுத்தப்படும். ஈ.வெ.ஆர். சாலையில் வேப்பேரி, ஈகா தியேட்டர் உள்ளிட்ட 6 சந்திப்புகளில் இந்த அமைப்பு ஏற்கனவே சோதனை முறையில் இயக்கப்பட்டுள்ளது.
எப்படி இயங்கும் இந்த அமைப்பு?
ஒவ்வொரு சந்திப்பிலும் மூன்று முக்கிய கருவிகள் பயன்படுத்தப்படும்
சென்சார்கள்: வாகனங்களின் வேகத்தையும் பயண நேரத்தையும் கண்காணிக்கும்.
ஏஐ கேமராக்கள்: வாகனங்களை எண்ணி, அவை செல்லும் திசையை கண்டறிந்து, கார், பஸ், பைக், பாதசாரிகள் என பிரித்து அறியும்.
கட்டுப்பாட்டு அலகு: இந்த தகவல்களை உடனடியாக பகுப்பாய்வு செய்து, சிக்னல் நேரத்தை மாற்றும்.
வேப்பேரியில் உள்ள சென்னை காவல் தலைமையகத்தில் இந்த அமைப்பு மையப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும்ம்.
முக்கிய பாதைகளில் சிக்னல்களை ஒருங்கிணைத்து, வாகனங்கள் அடிக்கடி நிற்காமல் தொடர்ந்து செல்லும் வகையில் “பச்சை வழித்தடங்கள்” உருவாக்கப்படும். இது ஈ.வி.ஆர். சாலை போன்ற பாதைகளில் கூட்ட நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அமைப்பு நேரடி வீடியோ மற்றும் பழைய போக்குவரத்து தரவுகளை பயன்படுத்தி, நெரிசலை முன்கூட்டியே கணித்து சிக்னல்களை மாற்றும். மேலும், ஆம்புலன்ஸ் அல்லது முக்கிய பிரமுகர்கள் செல்ல வேண்டிய அவசர நேரங்களில் காவல்துறையினர் கைமுறையாக கட்டுப்படுத்தும் வசதியும் உள்ளது. தற்போது சென்சார்கள் மற்றும் ஏஐ கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கிவிட்டது. அடுத்த சில மாதங்களில் இந்த பணிகள் முடிவடையவுள்ளது,