கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
திருவொற்றியூர், ஆக. 6: திருவெற்றியூர் சன்னதி தெருவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் உள்ளது. பூலோக கயிலாயம் என்ற வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலின் உள்புறத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் மீன்கள், மற்றும் வாத்துகள் உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தில் துள்ளி விளையாடும் மீன்களையும், வாத்துகளையும் ரசிப்பார்கள். இந்நிலையில், நேற்று காலை பிரம்ம தீர்த்தக் குளத்தில் இருந்த மீன்கள் இறந்து கிடந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதையடுத்து, கோயில் உதவி ஆணையர் நற்சோனை, பிரம்ம தீர்த்த குளத்தில் இறந்து கிடந்த டேங் கிளினர் மீன்கள், பங்கஸ் மீன்கள் ஆகியவற்றை மீனவர்கள் உதவியுடன் வலைகள் மூலம் அகற்றினர். இதுகுறித்து, கோயில் உதவி ஆணையர் நற்சோனை கூறுகையில், குளத்தில் அதிக அளவில் மீன்கள் இருந்ததால் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம். மீன்களை பாதுகாக்கவும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.