காலியாக உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணியிடங்களுக்கு நேரடி நேர்காணல்: சென்னை முதன்மை அஞ்சல் அதிகாரி தகவல்
சென்னை, நவ.5: காலியாக உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணியிடங்களுக்கு நேரடி நேர்காணல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை முதன்மை அஞ்சல் அதிகாரி சுவாதி மதுரிமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘இந்திய அஞ்சல் துறையின் சென்னை தலைமை அஞ்சல் நிலையத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கான நேரடி முகவர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடைபெற உள்ளது. இந்த நேர்காணலில் பங்கேற்க, அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்காணல் தேதியன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை. இது அரசுப் பணி அல்ல என்பதும், முழுக்க முழுக்க கமிஷன் அடிப்படையிலான பணி என்பதும் குறிப்பிடத்தக்கது. விண்ணப்பதாரர்கள் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் முகவராகவும் இருக்கக்கூடாது.
நேர்காணலில் தேர்வு செய்யப்படும் நபர்கள், இந்திய ஜனாதிபதி பெயரில் உறுதிமொழி அளிக்கப்பட்ட தேசிய சேமிப்புப் பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரம் வடிவில் ரூ.5,000 பாதுகாப்பு வைப்புத் தொகையாகவும், தற்காலிக உரிமக் கட்டணமாக ரூ.250ம் செலுத்த வேண்டும். விருப்பமுள்ள தகுதியான நபர்கள், தங்களது அசல் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் அவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணலுக்கான விண்ணப்பப் படிவத்தை, சென்னை தலைமை அஞ்சல் நிலையத்தின் இரண்டாவது மாடியில் உள்ள பி.எல்.ஐ பிரிவில் நேர்காணல் நாளன்று காலை 10 மணி முதல் நேரில் பெற்றுக்கொள்ளலாம். இந்த நேர்காணல், சென்னை, தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நவம்பர் 7ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு, 9940221297, 044-25212549 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணலில் பங்கேற்க பயணப்படி எதுவும் வழங்கப்படாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.