இந்திய கடற்படை சார்பில் முதன்முறையாக ‘சென்னை அரை மாரத்தான்’ ஓட்டம்: டிச.14ல் பொதுமக்களும் பங்கேற்கலாம்
சென்னை, நவ.5: இந்திய கடற்படை சென்னையில் முதன்முறையாக அரை மாரத்தான் ஓட்டத்தை வரும் டிசம்பர் 14ம் தேதி நடத்த உள்ளது. மும்பை, விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் மாரத்தான் நிகழ்ச்சியை நடத்திய இந்திய கடற்படை மாரத்தான்களின் வெற்றிக்குப் பிறகு, முதன்முறையாக சென்னையில் முதல் ‘சென்னை அரை மாரத்தான்’ ஓட்டத்தை வரும் டிசம்பர் 14ம் தேதி நடத்த உள்ளது. https://chennainavyhalfmarathon.com/ எனும் இணையதள பக்கத்திற்கு சென்று விருப்பம் உள்ள பொதுமக்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்திய கடற்படையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் மூத்த அதிகாரி கமடோர் சுவரத் மாகோன், சென்னை அரை மாரத்தானுக்கான அதிகாரப்பூர்வ டி-ஷர்ட்டை நேற்று வெளியிட்டார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த மாரத்தான், போதைப்பொருள் இல்லாத இந்தியா, பெண்கள் சக்தி, ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஆகிய முக்கிய நோக்கங்களை ஊக்குவிப்பதை இலக்காக கொண்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு வீரர்களுடன் இணைந்து தோளோடு தோள் சேர்ந்து ஓடும் தனித்துவமான நட்புறவுக்கும் இந்த நிகழ்வு வழிவகுக்கிறது. இந்த சென்னை மாரத்தான் 3 பந்தயப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை, ‘ஐஎன்எஸ் அடையாறு’ என்ற பெயரிலான 21.1 கி.மீ. அரை மாரத்தான் ஓட்டம், ”ஐஎன்எஸ் பருந்து” என்ற பெயரிலான 10 கி.மீ. ஓட்டம் மற்றும் ”ஐஎன்எஸ் பல்லவா” என்ற பெயரிலான 5 கி.மீ. ஓட்டம் ஆகியவையாகும். இவை அனைத்தும் சென்னை நேப்பியர் பாலம் அருகே தொடங்கி, ஐஎன்எஸ் அடையாறு கடற்கரையில் முடிவடைகின்றன. ரூ.10,00,00 மதிப்பில் பரிசுத் தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்திய கடற்படை சென்னை அரை மாரத்தானில் சுமார் 8 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டப்பந்தயத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க, https://chennainavyhalfmarathon.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.