முன்விரோத தகராறில் வழக்கறிஞர் உள்பட இருவருக்கு வெட்டு
பெரம்பூர், ஆக.5: வியாசர்பாடி பி.வி.காலனி சாந்தி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (25), வழக்கறிஞர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த அர்ஜூன் (30), பினாயில் மொத்த விற்பனை செய்து வருகிறார். இவர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு, வியாசர்பாடி பி.வி.காலனி 1வது குறுக்கு தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த அருண் மற்றும் அவரது நண்பர்கள், இவர்களை வழிமறித்து, முன்விரோத தகராறு காரணமாக மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அருண் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாக வெட்டினர்.
அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த ஆகாஷ், அர்ஜூன் ஆகிய இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து வியாசர்பாடி பி.வி.காலனி 1வது குறுக்கு தெருவை சேர்ந்த அருண் (24), எருக்கஞ்சேரியை சேர்ந்த விக்னேஷ் (19) ஆகிய இருவரை கைது செய்தனர்.