முகப்பேர் பகுதியில் ஸ்கேன் சென்டர் நடத்தி கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தை தெரிவித்து பல லட்சம் வசூல் வேட்டை: இஎஸ்ஐ மருத்துவர் மீது வழக்குப்பதிவு
அண்ணாநகர், செப்.3: முகப்பேர் கிழக்கு பகுதியில் ஒரு தனியார் ஸ்கேன் சென்டர் உள்ளது. இங்கு மாலை நேரத்தில் மட்டும் கர்ப்பிணிகள் அதிகளவில் வந்து சென்றது பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்த போது, ஸ்கேன் சென்டரில் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று சோதனை நடத்தி தெரிவித்து வந்ததும், இதற்காக அதிக பணம் வசூலித்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவ இயக்குனருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு அரசு மருத்துவ இயக்குனர் மீனாட்சி சுந்தரி தலைமையில், மருத்துவ குழுவினர் இந்த ஸ்கேன் சென்டருக்கு சென்று, அங்கு காத்திருந்த கர்ப்பிணிகளிடம் நைசாக விசாரித்துள்ளனர்.
அப்போது, கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்கொள்வதற்காக வந்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவ இயக்குனர் மீனாட்சி சுந்தரி, ஸ்கேன் சென்டர் உள்ளே சென்று டாக்டரிடம் விசாரித்துள்ளார். அப்போது அங்கிருந்த டாக்டர், ‘கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று யாரிடமும் சொல்லவில்லை. உங்களுக்கு யாரோ பொய்யான தகவல் கொடுத்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து தகவல் கொடுத்த பெண்ணை வரவழைத்து விசாரித்தபோது, அந்த டாக்டர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதுசம்பந்தமாக அரசு மருத்துவ குழு கொடுத்துள்ள புகாரின்படி, நொளம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து, ஸ்கேன் சென்டர் நடத்திவரும் டாக்டர் பகவதி வரதராஜனிடம் விசாரித்து வருகின்றனர்.
இவர், கடந்த 2 வருடங்களாக இந்த ஸ்கேன் சென்டர் நடத்தி வருவதும், சென்னை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிவதும் தெரியவந்தது. இந்த ஸ்கேன் சென்டருக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு கருவில் இருப்பது ஆனா, பெண்ணா என்று சொல்வதற்கு அதிக பணம் வசூலித்ததும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர் பகவதி வரதராஜன், உதவியாளர் அன்னாள் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.