ரூ.427 கோடியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் நவம்பரில் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
சென்னை, செப்.3: குத்தம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையம் நவம்பர் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கத்தில் ரூ.427 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் முன்னேற்ற பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினர்.
பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கொண்டுவந்து இருக்கிறார்.
அதில், ஒரு பகுதியாக கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் தற்போது பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. தொடர்ந்து, குத்தம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தில் தினசரி 300 எம்டிசி பேருந்துகளும், 600 எஸ்சிடிசி பேருந்துகளும், 50 கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளும், அண்டை மாநிலத்திற்குச் செல்லும் வழித்தடங்களில் 36 ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளும் இயக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த, பேருந்துகளில் வார நாட்களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயணிப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் அந்த எண்ணிக்கை கூடுதலாகி 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை பயணிப்பாளர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாக்காலம், தொடர் விடுமுறை நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணிப்பார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த, பேருந்து முனையம் சென்னையைச் சுற்றியுள்ள மக்களின் போக்குவரத்துக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். இந்த, குத்தம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த மாவட்டத்தின் அமைச்சர் ஆவடி நாசரும், இந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமியும், எங்கள் துறையினுடைய செயலாளர் காகர்லா உஷா, துறையினுடைய உறுப்பினர் செயலாளர் பிரகாஷ், சிஇஓ சிவஞானம், மாவட்ட கலெக்டர் பிரதாப் மற்றும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம்.
கண்டிப்பாக இந்த பேருந்து முனையம் தொடங்க்கப்பட்ட நாளிலிருந்து மக்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் அளவிற்கு திட்டமிட்டு இருக்கிறோம். இந்த, புதிய புறநகர் பேருந்து முனையமானது இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வரால் அர்ப்பணிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறினார். ஆய்வின்போது, பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் முதன்மை செயலாளர் பிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப், ஆவடி காவல் துணை ஆணையாளர் (போக்குவரத்து) சங்கு, எம்டிசி இணை மேலாண் இயக்குநர் ராகவன், தலைமை பொறியாளர் மகாவிஷ்ணு, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் சாவித்திரி தேவி, குத்தம்பாக்கம் பேருந்து முனைய தலைமை நிர்வாக அலுவலர் பிரின்ஸிலி ராஜ்குமார், கண்காணிப்பு பொறியாளர் ராஜன்பாபு, எம்டிசி பொது மேலாளர் (இயக்கம்) நெடுஞ்செழியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.