சிங்கபெருமாள்கோவில் அருகே தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் கொள்ளை: சிசிடிவி காட்சி மூலம் ஆசாமிகளுக்கு வலை
சென்னை, செப்.2: சிங்கபெருமாள்கோவில் அருகே தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோ லாக்கரில் வைத்திருந்த 140 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிங்கபெருமாள்கோவில் பாரதியார் தெருவில் வசிப்பவர் ரத்தீஷ் (40), தொழிலதிபர். இவர், அதேபகுதியில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவரது தாய் வீட்டில் இருந்த நிலையில், ரத்தீஷ் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு, பக்கத்து தெருவில் வசித்து வரும் மகன் வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார்.
அங்கிருந்து, நேற்று காலை தனது வீட்டுக்கு ரத்தீஷ் வந்தபோது, அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் அவரது தாய் இருந்துள்ளார். இருப்பினும் பீரோ மற்றும் லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த துணிமணி உள்ளிட்ட பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 140 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வண்டலூர் சரக காவல் உதவி ஆணையர் ராஜிவ்ஆருண் பிரின்ஸ் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, வீட்டை சுற்றி ஆய்வு செய்தனர். மேலும், தாம்பரத்தில் இருந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மர்ம நபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர். மேலும், சிசிடிவி காட்சிகளை சேகரித்த போலீசார் மர்ம நபர்கள் பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலதிபரின் தாய் வீட்டில் இருந்தபோதே நகை கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மூதாட்டியை கட்டிப்போட்டு 11 சவரன் துணிகர திருட்டு
குன்றத்தூர் காந்தி சாலை, மணிகண்டன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது தாய் வள்ளியம்மாள் (88) மற்றும் மனைவி அபிதா (59) ஆகியோருடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். ராஜேந்திரன் பொழிச்சலூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை நிமித்தமாக ராஜேந்திரன் திருமண மண்டபத்திலேயே தங்கி இருந்தார். வீட்டில் அவரது மனைவி அபிதாவும், தாய் வள்ளியம்மாள் மட்டும் தனியாக இருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவன், நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் வீட்டின் மதில்சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வெளியே இருந்த கழிவறைக்கு செல்வதற்காக அபிதா நடந்து சென்றார்.
அவரது, பின்னாலேயே சென்ற மர்ம நபர், அவரது முகத்தில் ஓங்கி குத்தியதில், அவர் நிலை குலைந்து அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர், நைசாக வீட்டிற்குள் சென்ற அந்த மர்ம நபர், அங்கிருந்த மூதாட்டி வள்ளியம்மாளையும் தாக்கி, அவரது கைகளை பின்புறமாக கட்டிப் போட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் செயின் மற்றும் 4 சவரன் வளையல்கள் என்று மொத்தம் 11 சவரன் நகைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக இருவரையும் மீட்டனர். அவர்களில் வள்ளியம்மாளை மட்டும் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த குன்றத்தூர் போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பிச் சென்ற கொள்ளையனை தேடி வருகின்றனர்.