பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி
பெரம்பலூர்,ஜூலை 14: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளை முன்களப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தகவல். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக பல நல திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்காக, உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும் ஒரு சிறப்பான திட்டம். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் கடைகோடியில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகளும், மறுவாழ்வு சேவைகளும் இல்லம் தேடி சென்றடைய வேண்டும் என்பதே ஆகும். இந்தத் திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உரிமைகள் திட்டத்தின் கீழ், சீட்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்களப் பணியாளர்கள் மூலம் நகர்புறம் மற்றும் ஊரக பகுதி முழுவதும் வீடுவீடாக சென்று மாற்றுத்திறனாளிகளையும்.
பொதுமக்களையும் மொபைல் ஆப் மூலம் கணக்கெடுக்கும் பணி ஜூன் 2ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட்மாத இறுதி வரை நடைபெற திட்டமிடப் பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூன் 2 ம் தேதி முதல் வீடுவீடாக சென்று கணக்கெடுக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆகையால் உங்கள் இல்லம் தேடி வரும் முன் களப்பணியாளர்கள் கேட்கும் ஆவணங்களை வழங்கி, பொது மக்கள் (ஆதார் கார்டு, ரேசன் கார்டு) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (ஆதார் கார்டு, ரேசன் கார்டு, மருத்துவ சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை சரிபார்க்க மட்டுமே) அனைவரும் இந்த சமூக தரவு கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பு அளித்து, கணக் கெடுக்கும் பணி சிறப்பாக அமைய உதவிட வேண்டும்.
இது தொடர்பான விவரங்கள் தேவையிருப்பின் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்குள் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தினை 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.