மரவள்ளி கிழங்கு விலை டன்னுக்கு ₹1000 சரிவு
சேந்தமங்கலம், ஜன.12: சேந்தமங்கலம், புதுச்சத்திரம், கொல்லிமலை வட்டார பகுதிகளில் மரவள்ளி விலை, டன்னுக்கு ₹1000 சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேந்தமங்கலம் வட்டார பகுதியான பேளுக்குறிச்சி, மேலப்பட்டி, கல்குறிச்சி, சிங்களாந்தபுரம், புதுச்சத்திரம் வட்டார பகுதியான திருமலைப்பட்டி, கோவிந்தம்பாளையம், மின்னாம்பள்ளி, காரைக்குறிச்சி, கண்ணூர்பட்டி, கதிராநல்லூர், சர்க்கார் உடுப்பம், கொல்லிமலை வட்டார பகுதியான அரியூர் நாடு, வளப்பூர் நாடு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக மரவள்ளி பயிரிட்டுள்ளனர். மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவு சத்து புள்ளிகளின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த சில வாரங்களாகவே மரவள்ளி கிழங்கின் விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு டன் ₹7 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த வாரம் மேலும் விலை குறைந்து ஒரு டன் ₹6,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கடந்த வாரம் ஒரு டன் ₹8 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் ₹7 ஆயிரத்திற்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.