நாகர்கோவில் அருகே திமுக மாஜி பெண் கவுன்சிலரை மிரட்டியவர் மீது வழக்கு
நாகர்கோவில், ஜூலை 7 : நாகர்கோவிலை அடுத்த கணியான்குளம் பாறையடி பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி உமா(42). ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய 1 வது வார்டு திமுக முன்னாள் கவுன்சிலர் ஆவார். சம்பவத்தன்று கணியான்குளம் சந்திப்பில் உமா நின்று கொண்டிருந்தார். அப்போது புளியடி சாலையை சேர்ந்த மணிகண்டன்(55) என்பவர் அங்கு வந்து உமாவிடம் ரப்பர் பேக்டரி தொழில் செய்ய விடாமல் செய்து என் மீது மீண்டும் மீண்டும் போலீஸ், கலெக்டரிடம் புகார் கொடுக்கிறாய். உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது.
மரியாதையாக என் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் வாங்கி விடு. இல்லையென்றால் உன்னை பைக்கோடு வைத்து இடித்து கொன்று விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது பொதுமக்கள் திரண்டதால் மணிகண்டன் அங்கிருந்து சென்றுள்ளார். இது குறித்து உமா வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன் மீது பி.என்.எஸ். சட்டப்பிரிவு 126 (2), 296 (பி), 351 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.