குளித்தலை அருகே குட்கா விற்றவர் மீது வழக்கு
கரூர், மார்ச் 26: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, சட்டம் ஒழுங்கு போலீசார், மதுவிலக்கு போலீசார் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படை அமைத்து, சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அதில், கருர் மாவட்டம் குளித்தலை அடுத்துள்ள தேவதானம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக பசுபதிபாளையம் போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் அளித்துள்ளனர்.தகவலறிந்து வந்த போலீசார், சோதனை மேற்கொண்ட போது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி(40) என்பவர் குட்கா விற்றது தெரியவந்தது.இதனையடுத்து, அந்த கடையில் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, ராஜேஸ்வரி மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.