இன்ஜினியருக்கு கொலை மிரட்டல் தம்பதி மீது வழக்கு
போடி, ஜூலை 11: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, அம்மணிசத்திரம், செந்திலைபட்டினத்தைச் சேர்ந்தவர்அஜிஸ்கான் (32). இவர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அஜிஸ்கான் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, போடி அருகே சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள கரையாம்பட்டியை சேர்ந்த தமிழ் கருப்பசாமி என்பவரின் நிலத்தை விலைக்கு வாங்கினார். அதனை உடனடியாக போடி பத்திர பதிவு அலுவலகத்தில் இவரது பெயருக்கு பதிவு செய்து நிலத்தை பெற்றுக் கொண்டார். இதற்கிடையில் தமிழ் கருப்பசாமி அஜிஸ்கான் பணமே தரவில்லை என கூறி பிரச்னை செய்து வந்துள்ளார். தொடர்ந்து நேற்று அஜிஸ்கான் அந்தத் தோட்டத்தில் பயிர் சாகுபடி செய்வதற்காக உழுது கொண்டிருந்தார். அப்போது தமிழ் கருப்பசாமியும் அவரது மனைவி பொன்னுத்தாயின் சம்பவ இடத்திற்கு சென்று அஜிஸ்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தம்பதி தப்பியோடி விட்டனர். அஜிஸ்கான் போடி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் எஸ்.ஐ மலைச்சாமி கணவன் மனைவி மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றார்.