மணல் திருடுவோர் மீது வழக்கு
மதுரை, ஜூலை 10: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உன்னியூரைச் சேர்ந்த ரகுராமன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: உன்னியூர் காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரி துவக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மட்டுமின்றி, சுற்றுச் சூழலும் கடுமையாக பாதிக்கும். எனவே, ஆற்றில் மணல் அள்ள தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், தற்போதுவரை காவிரியில் மணல் அள்ள அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ஏதேனும் சட்டவிரோத மணல் குவாரி இருப்பது தெரியவந்தால், மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடர வேண்டும் என்று இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது என, உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.